இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரிசாத் பதியுதீனின் வழக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார்.

குறித்த மனு இன்று(05) உயர் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது
நீதியரசர் மஹிந்த சமயவர்தன தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் குறித்த மனுவில் இருந்து விலகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தாங்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன ஆகியோரடங்கிய ஆயம் முன்னிலையில் அந்த மனு, இன்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில், மனு மீதான பரிசீலனைகளில் இருந்து தாம் விலகுவதாக, நீதியரசர் மஹிந்த சமயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மற்றுமொரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த மனு முன்னதாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில், ஜனக டி சில்வா, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகிய மூன்று நீதியரசர்கள், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில், மனு மீதான பரிசீலனையில் இருந்து விலகியிருந்தனர்.

மனுதாரர்கள் குறித்த மனுவில், எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை தாங்கள் கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனூடாக, தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்து தங்களை விடுவிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர்நீதிமன்றை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *