இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது ஆபத்து – WHO கடும் எச்சரிக்கை

டெல்டா திரிபு காரணமாக தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட் பரவல் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.

எனவே கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கொவிட் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் கொவிட் தடுப்பூசிகளை செலுத்துவதால் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவிக்கையில்,

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது சரியான நடவடிக்கை அல்ல. இது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

தற்போது காணப்படும் குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே வெவ்வெறு 2 தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.

உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் தெரிவிக்கையில்,

கொரோனாவுக்காக கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது செலுத்துகையை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கு தேவையான போதிய ஆதாரங்கள், தரவுகள் இப்போது இல்லை.

அதற்கு பதிலாக செல்வந்த நாடுகள் தங்களிடம் எஞ்சியுள்ள தடுப்பூசிகளை வறிய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

உலகளாவிய ரீதியில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை கடந்த 10 வாரங்களாக குறைந்திருந்த நிலையில், டெல்டா திரிபு காரணமாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்பின் கோவெக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *