இலங்கைக்கு அடுத்த வருடம் காத்திருக்கும் ஆபத்து – ரணில் எச்சரிக்கை

இலங்கை தற்போது 430 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்களை மீளச்செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது.

இலங்கையின் இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, எதிர்வரும் 2 – 3 வருடகாலத்திற்கு அவசியமான நிதியுதவிகளை அதனிடமிருந்து பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் நிதியுதவியைப் பெறமுடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரநிலை தொடர்பில் வெளியிட்டிருக்கும் விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

அண்மைக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் வெளிநாட்டு நாணய இருப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எமது வெளிநாட்டு இருப்பான 4 பில்லியன் டொலர்களில் பிணையங்களுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டதன் பின்னர் ஒரு பில்லியன் டொலர் குறைவடையும்.

எனவே தற்போது எம்மிடம் இருக்கும் வெளிநாட்டு இருப்பின் பெறுமதி 3 பில்லியன் டொலர்களாகும். அதேபோன்று எரிபொருள் கூட்டுத்தாபனம் 130 கோடி டொலர்களைச் செலுத்தவேண்டிய நிலையிலிருக்கின்றது.

இன்றளவில் எமது நாட்டின் வணிக வங்கிகளில் டொலர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது. வங்கிகள் கடனாளிகளாக மாறியிருக்கின்றன.

இதுவரையில் அதுகுறித்த தரவுகள் வெளியிடப்படாத போதிலும், தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி அக்கடன்களின் பெறுமதி 300 கோடி அமெரிக்க டொலராகும்.

ஆகவே இப்போது எமது நாடு மீளச்செலுத்தவேண்டியிருக்கும் கடனின் பெறுமதி 430 கோடி அமெரிக்க டொலர்களாகும்.

இருப்பினும் எம்மிடம் தற்போதிருக்கும் 300 கோடி டொலர்களில் இவ்வருடம் முடிவடைவதற்குள் 10 கோடி டொலர்களைப் பிணையங்களுக்கான கொடுப்பனவாகச் செலுத்தவேண்டியுள்ளது.

எமது நாட்டுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதியளவு நிதி இல்லாததன் காரணமாக, இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பணமில்லை.

அதனாலேயே உர இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, சேதன உரத்தை உற்பத்தி செய்யப்போவதாக அரசாங்கம் கூறுகின்றது.

அதேபோன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு அவசியமான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான பணம் இல்லாததன் காரணமாகவே 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் தடுப்பூசி வழங்கப்படும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் அண்மையில் சர்வதேச நாணய நிதியமானது அதில் அங்கம்வகிக்கும் 198 உறுப்புநாடுகளுக்கு அவசியமான நிதியுதவியை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. அதனூடாக எமது நாட்டிற்கு 80 கோடி டொலர் நிதி கிடைக்கப்பெறும்.

எனினும் தற்போது நாடு இலங்கையின் பொருளாதார நெருக்கடி யை ஈடுசெய்வதற்கு அதுவும் போதுமானதல்ல.

ஆகவே இயலுமானவரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, எதிர்வரும் 2 அல்லது 3 வருடகாலத்திற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ததன் பின்னர் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்தும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

அவ்வாறில்லாவிட்டால் எதிர்வரும் வருடத்தில் தொழில் அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் வாழ்வாதாரத்தை உழைப்பதிலும் பாரிய சிக்கல்கள் ஏற்படும்.

எனவே அரசாங்கம் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டின் பொருளாதாரநிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற மேலும் பல முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை அறிந்துகொள்ள விருப்பமானவர்கள் எமது Whats App குழுவில் இணைந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *