இலங்கைக்கு தலையிடியாகியுள்ள அமெரிக்காவின் புதிய அறிவிப்பு

இலங்கை என்பது வியாபாரங்களை தொடங்குவதற்கு உகந்த நாடு அல்ல எனவும் பல சவால்களை கொண்ட நாடு எனவும் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் பெயரிட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான முதலீட்டு நிலைமைகள் தொடர்பான அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத பொருளாதார கொள்கை, செயல் திறனற்ற அரச சேவை, அரச வரவு செலவு குறித்த பல விடயங்களை கருத்தில் எடுக்கப்பட்டே இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அரச நிறுவனங்களில் காணப்படும் ஊழல் மோசடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாக அமைந்துள்ளதென அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி முறையில் காணப்படும் உறவுமுறை சிக்கல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான சட்டங்களும் இந்த தரப்படுத்தலுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டங்கள் இருக்கின்ற போதும் அதனை முறையாக செயல்படுத்துவதில் காணப்படும் பிரச்சினையை ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் அடிக் கோடிட்டு காட்டியுள்ளது.

ஒரு ஆட்சி நிறைவடையும் போது அந்த ஆட்சியில் காணப்பட்ட ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கு புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பு நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் இலங்கையில் காணப்படும் இரண்டு பிரதான கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற போதிலும் இரண்டு கட்சிகளிலும் ஊழல் மோசடிக்காரர்கள் இருப்பதாக ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.