கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தாக்குதல் – தீவிர விசாரணைக்கு பணித்த பாதுகாப்பு செயலாளர்

மன்னார் காவற்துறை பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் (சிற்றாலயங்கள்) மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமால் குணரட்ன உறுதியளித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்துள்ளார்.

கிறிஸ்தவ சிற்றாலயங்கள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் காவற்துறை பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது இனந்தெரியாதோரினால் நேற்று முன்தினம் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

மன்னார் வயல் வீதி பகுதியில் உள்ள இரு சிற்றாலயங்கள் மீதும், மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் உள்ள சிற்றாலயம் ஒன்றின் மீதும் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, மன்னாரின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மாத்திரம் 6 கத்தோலிக்க தேவாலயங்கள் (சிற்றாலயங்கள்) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.