காரசாரமான பல கேள்விகளுடன் கர்தினால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்

ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணைகளை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு இருவர் மூவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணை நிறைவு பெற்றதாகக் கூறி இந்த சம்பவத்தை காப்பட்டிற்கு அடியில் மறைத்து இல்லாது செய்ய முயற்சிக்க வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உயித்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று இன்று (13) கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போதே கொழும்பு பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இன்னும் திருப்தி இல்லை எனவும் தற்போதைய விசாரணை நிலைமைகள் குறித்தும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என்பதால் இந்த விடயம் குறித்து துரிதமான விசாரணையை எதிர்பார்ப்பதாக கர்தினால் மெல்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தாக்குதலில் மறைந்திருக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவை என்னவென்று முறையாக விசாரணை செய்து பார்க்க வேண்டும்.

அதற்காக தற்போது அரசியல் தலைமைக்கு வேண்டியபடி செயற்படக்கூடிய பொலிஸ் அரசியல் பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் அத்துடன் அரசியல் உயர்மட்டத்தில் தலையீடு செய்து இடையூறு விளைவிக்க கூடிய சட்ட ஏற்பாடு போன்றவற்றை வைத்துக்கொண்டு முறையான விசாரணையை சாத்தியப்படுத்த முடியாது என ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எனினும் ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அடி முடியை கண்டுபிடிக்கும் வரை ஓயப்போவதில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக ரீதியாக நீதியை பெற்றுக் கொள்வதற்காகவே நாம் முயற்சிப்பதுடன் சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை.

சர்வதேசத்தை நாடினால் அது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.எந்த அரசியல் சாயமும் பூசப்படாதவர்களைக் கொண்டு முறையான உள்ளக விசாரணை ஒன்றை நடத்த வேண்டும்.

மேலும், முன்னாள் சட்ட மா அதிபர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை பெரும் சதி (GRAND CONSPIRACY) என கூறியிருந்ததை நாம் ஆழமாக ஆராய வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 26 மாதங்கள் கடந்துள்ளன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ‍வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள, அதனை திட்டமிட்டவர்கள், இந்த கொடூரத் தாக்குதலை தவிர்க்க முடிந்திருந்தும் அதனை பொருட்படுத்தாது விட்டவர்கள் ஆகியோரை சட்டத்துக்கு முன்கொண்டுவரும் செயற்திட்டம் மிகவும் மந்தகதியில் நடத்தப்பட்டு வருகின்றதை நாம் மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்களின் மில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு செயற்படுத்தப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எந்த காரணத்துக்காக தாமதப்படுத்தப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு செயற்பாடுகள் குறித்து எமக்கு திருப்தி இல்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *