பசில் – விமல் இடையே நடந்த இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையில் மிகவும் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள ஷங்க்ரி-லா ஹோட்டல் வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய பசில் ராஜபக்ச தற்போது சுகாதார விதிமுறைகளின்படி ஷாங்க்ரி-லா ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பில் பசில் மற்றும் விமல் வீரவங்ச மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வருகை தொடர்பாக விமல் சார்பு குழுவின் கருத்துக்கள் குறித்தும் பசில் ராஜபக்ச விசாரித்ததாக கூறப்படுகிறது.

தனக்கும், தனது குழுவினருக்கும் இது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்று விமல் வீரவங்ச, பசிலிடம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பினை தொடர்ந்து உதய கம்மன்பில மற்றும் பிற மூத்தவர்களுடன் கலந்துரையாடுவதாக பசில் ராஜபக்ச அமைச்சர் விமலிடம் அறிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் முடிவில் இருவரும் சந்தித்ததாக எந்தவொரு ஊடகமும் கேட்டால், அதனை கடுமையாக நிராகரிக்க ஒப்புக் கொண்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *