ஆறு கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்ட நபர் STF துப்பாக்கிச் சூட்டில் பலி

திட்டமிடப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய லலித் வசந்த என்பவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சீதுவை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த அதிசொகுசு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்த குறித்த நபர் பலியாகியுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மோட்டார் வாகனத்தில் மேலும் இருவர் இருந்ததாகவும், குறித்த இடத்தில் இருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

44 வயதுடைய சீதுவை பிரதேசத்தை சேர்ந்த லலித் வசந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 6 கொலைச் சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லலித் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.