மரணமான டயகம சிறுமி தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில் பணிப் பெண்ணாக வேலைசெய்து மரணமான டயகம சிறுமி, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த சிறுமியின் நீதிமன்ற வைத்திய அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரியவின் முன்னிலையில், பொரளை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வைத்திய பரிசோதனை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தடயவியல் மருத்துவர் எம்.என் ராஹூல் ஹக்வின் கையொப்பத்துடன் இவ்வறிக்கை, பொரளை பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இறந்த சிறுமி, தாக்கப்படவில்லை. சித்திரவதை செய்யப்படவில்லை. எனினும், எரிகாயங்களால், உடல் 72 சதவீதம் எரிந்துள்ளதென அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சிறுமி கர்ப்பமடையாதவாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் உடலின் மேல் பகுதியில் ஏற்பட்ட எரிகாயங்களில் கிருமிகள் தொற்றியமையால், ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாகவே இச்சிறுமி மரணமடைந்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமடைந்த, தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதுடைய இச்சிறுமிக்கு நீதி கோரி, அவருடைய சொந்த ஊரான டயகமவில், நேற்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொரளை காவல்துறைக்கு மேலதிகமாக, இரண்டு விசேட குழுக்கள் விசாரணைகளை மேற்கொள்கின்றன.

கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும், கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

நேற்றைய தினம், குறித்த குழுக்கள், சிறுமி முன்னதாக வசித்த, பாடசாலைக்கு சென்ற அவிசாவளை, புவக்பிட்டி – கிரிவந்தல பிரதேசத்தில், நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி, கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இரண்டு குழுக்கள், டயகம பகுதிக்கு சென்று, சிறுமியின் தாயாரிடம் இன்று மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளதுடன், ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில், குறித்த கைபேசியில் ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள பொரளை காவல்நிலைய பொறுப்பதிகாரியினால் அந்த கைபேசி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கைபேசி தரவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கும், வங்கிக் கணக்கை ஆராய்வதற்கும் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இந்தத் தரவுகளின் அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, விசாரணைகள் முன்னெடுக்கப்படள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.