ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி தீப்பற்றி எரிந்த நிலையில் வைத்தியசாலையில்

ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயது யுவதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்  வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரின் உடலில் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அக்கரபத்தனை, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதான மேற்படி யுவதி வறுமை காரணமாக 7 ஆம் தரத்துடன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளார்.

6 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவரான இவருக்கு, மூத்த சகோதரன் ஒருவரும், சகோதரிகள் நால்வரும் உள்ளனர்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்னதாக தரகர் ஒருவரின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளதாக யுவதியின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் எமது செய்திப்பிரிவுக்கு அளித்த தகவலுக்கமைய, யுவதி தொழிலுக்கு சென்றதன் பின்னர், ஒரு தடவைக்கூட அவரை சந்திப்பதற்கு அவர் பணியாற்றிய வீட்டார் அனுமதித்திருக்கவில்லை.

எனினும், அவர் மாதாந்தம் வீட்டுக்கு, பணம் அனுப்பிவந்ததுடன், அவ்வப்போது தொலைபேசி ஊடாகவும் வீட்டாருடன் பேசியுள்ளார்.

இறுதியாக வீட்டாருடன் தொலைபேசியில் பேசியபோது, அவ்வீட்டில் பணிபுரியும் சாரதி ஒருவர் தன்னை தாக்கினார் என அவர் கூறியதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் குறித்த சிறுமி நுளம்பு சுருள் ஒன்றை பற்ற வைக்க சென்றிருந்தபோதே, உடலில் பற்றியுள்ளதாகவும், அதன் பின்னர் அவரை மீட்டு, தாம் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டார் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், தாம் அவ்வீட்டுக்கு சென்று பார்த்தபோது, குறித்த யுவதி இருந்ததாகக் கூறப்படும் வீட்டில் வெறெந்த பொருளும் தீப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் உடலில், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பகுதிகள் தீயினால் எரிந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுவருவதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், நாம் இதுதொடர்பில் விசாரித்தபோது, இச்சிறுமி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றபோது அவர் 16 வயதை பூர்த்திசெய்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நாம், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி, பேராசிரியர் பிரதீபா மஹானாமவிடம் வினவியபோது, இந்த விடயத்தின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் சாதாரண சட்டம் மற்றும் சிறுமிக்கு கிடைக்க வேண்டிய கல்வியை பெற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *