ரிஷாட் பதியூதீனின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு − பெளத்தாலோக்க மாவத்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இவ்ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ” சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பது, அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீனுக்கு தெரியாதா?” என ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் ”மலையகத்திலிருந்து சிறுவர்கள் அதிகளவில் செல்வந்தர்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாறு சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகக் கடும் சட்டங்களை இயற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

மேலும் ”இந்த சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், சிறுமிக்கு நீதி கிடைக்க தாமதமாகும் பட்சத்தில், இன்று அமைதி வழியாக நடத்தப்பட்ட போராட்டம், நாளை பாரியளவில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.