வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்போருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி

விசா அனுமதிபெற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்களுக்கு, தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வகையை செலுத்துவதற்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சைனோபாம் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை தமது நாடுகளுக்கு அனுமதிக்காதிருக்க மத்திய கிழக்கின் சில நாடுகள் தீர்மானித்துள்ளன.

தற்போது, ​​சுமார் 15 நாடுகளில் பணி அனுமதி மற்றும் விசா வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 8,000 இலங்கை தொழிலாளர்கள் அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி உள்ளிட்ட சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, குறித்த தொழிலாளர்கள் துபாய், பஹ்ரைன், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, மாலத்தீவுகள், மலேசியா, இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளனர்.

ஃபைசர் தடுப்பூசி அந்த நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தாக இருப்பதால், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற மேலும் பல முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான செய்திகளை அறிந்துகொள்ள விருப்பமானவர்கள் எமது Whats App குழுவில் இணைந்து கொள்ளலாம்.

அதன்படி, அடுத்த வாரம் கொழும்பு மத்திய நிலையம் ஒன்றில் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொடுப்பதற்கும் திட்டமிட்டபடி இரண்டாவது டோஸை பெற்றுக் கொடுத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் வௌிநாடு செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ள பலர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.