ரிசாத் வீட்டில் உயிரிழந்த சிறுமி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன்போது ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளையும், ஹிசாலினியை ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை காவல்துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமியான ஹிசாலினி, தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

பொரளை காவல்துறையினருடன், கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஹிசாலினியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற நபரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, ஹிசாலினியின் தாய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடம் மேலதிக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

ஹிசாலினியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கடந்த தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 13 தினங்களின் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக நீதி கோரி ஹட்டன் பிரதேசத்தில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்த நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராச மாணிக்கம் சாணக்கியன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோகணேசன் போன்றவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அத்துடன் சமுக வலைத்தளங்களிலும் ஹிசாலினிக்கு நீதி கோரி பதிவுப்போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.