15 வயது சிறுமி விற்கப்பட்ட சம்பவம் – கைதான அரசியல் புள்ளி

கல்கிசையில் சிறுமியொருவரை பணத்துக்காக இணையம் ஊடாக விற்பனை செய்த சம்பவத்தில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் லலித் எதிரிசிங்க உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கல்கிசையில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் தேவைக்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தாய் உள்ளிட்ட 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இணையத்தளம் ஊடாக, குறித்த சிறுமி விளம்பரப்படுத்தப்பட்டு, பலருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக, கல்கிசை தலைமையக காவல்நிலையத்துக்கு தெரியவந்திருந்தது.

இதுதொடர்பாக விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்தது. இதன்படி குறித்த சிறுமியை விற்பனை செய்ய முயற்சித்த 54 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் படி, குறித்த நபர் கடந்த 3 மாதங்களில் அந்த சிறுமியை 30 பேரிடம் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமி தொடர்பான விளம்பரத்தில் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபா வரையில் விலை கோரப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நேற்று(30) கைது செய்யப்பட்ட 18 பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *