அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

அனைத்துப் பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானம்

கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவினருடன் கலந்தாலோசித்து அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் பாடசாலைகளில் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்களை ஆரம்பிப்பதற்கு கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற கொவிட் தடுப்பு விசேட செயலணியுடன் காணொளி தொழில்நுட்பத்தின் மூலமான கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை தொடர்பாகவும் இதன்போது விசேட அவதானம் செலத்தப்பட்டுள்ளது.

அதே போன்று, தகுதியுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசியை வழங்கி நிறைவு செய்வதற்கும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தி தகுதியுடைய அனைவருக்கும் உடனடியாகத் தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதாரம், பாதுகாப்பு, விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசியைச் செலுத்தும் பணிகளை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *