மக்கள் பிரச்சினைகளை இனவாதத்தை பயன்படுத்தி திசை திருப்பவே மாட்டறைச்சி தடை விவகாரம்

மாடறுக்க தடை ஏன்? முஜிபுர் ரஹ்மான் - breaking news in Tamil

நாட்டில் விலை அதிகரிப்பு, விவசாயிகளுக்கு உரம் இன்மை உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சினைகள் மேலெலுகின்ற சந்தர்ப்பத்தில் இனவாத சிந்தனையுடன் மாடறுக்க தடை விவகாரத்தை முன்னிருத்தி மக்களை திசை திருப்ப ராஜபக்ஸ அரசாங்கம் முற்படுவதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மாட்டிறைச்சி தடை விவகாரம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் வாழ்வாதார பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன. மக்களின் ஜீவனோபாயம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது.

விவசாயிகளின் பிரச்சினைகள் இன்று மேலெழுந்துள்ளன. அவர்களுக்கு உரத்தின் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அரசின் திட்டமிடலற்ற கட்டுப்பாடுகள் அவர்களை பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால் நாடு முழுவதிலும் விவசாயிகள் வீதிக்கு இறங்கி ஆரப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.

அத்தோடு, நாளுக்கு நாள் அத்தியவசியக் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இதனால், மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது. விலை அதிகரிப்பை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சமையல் எரிவாயுக்களின் விலைகளும் எரிபொருட்களின் விலையும் சடுதியாக உயர்வடைந்திருக்கின்றன. அரசி விலை நிர்ணயத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் கை மீறிப் போயிருக்கின்றன.

இது போக, கட்டட நிர்மானப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் அரசாங்கம் இவற்றை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்காது இவ்விடயங்களை இனவாதத்தின் ஊடாக திசை திருப்பி மக்களை ஏமாற்றும் வேலைகளையே தொடர்ந்தும் செய்கின்றது.

கடந்த வாரம் அமைச்சரவையில் திடீரென மாட்டிறைச்சிக்கான தடையை நிறைவேற்றிக்கொண்டுள்ளது. இதன் மூலம் இனவாதிகளை சந்தோஷப்படுத்தி அவர்களை பயன்படுத்தி பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றது.

மாட்டிறை தடை செய்யப்படுவதனால் அதனுடன் இணைந்த தொழிற் துறைகள் பாதிக்கப்படுகின்றன.

இந் அரசாங்கத்தின் மாட்டிறைச்சி தடை நோக்கம் முஸ்லிம்களை இலக்காக் கொண்டு இருந்தாலும், பண்ணை வளர்ப்பாளர்கள், மாட்டு வியாபாரிகள், தரகர்கள் உள்ளிட்ட பெரும் தொகையான தொழிற் துறையினர் பாதிக்கப்படுகின்றனர்.

மாடு மற்றும் மாட்டிறைச்சி வியாபாரத்தின் ஊடாக சீவிக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் இல்லாமல் செய்திருக்கிறது.

இதனால், இன்னோரண்ண பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
மாட்டிறைச்சி தடை யோசனையால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானங்கள் பாதிக்கப்படும்.

குறிப்பாக பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வருமான வழியாக இந்த மாட்டிறைச்சி வியாபார முறைமை இருக்கிறது. அதனை அரசாங்கம் இல்லாமல் செய்வதற்கும் உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடவும் முயற்சிக்கிறது.

இந்த அரசாங்கத்திற்கு மாக்களின் ஜீவனோபாயம் முக்கியமில்லை. இனவாதிகளை குசிப்படுத்தி அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் இந்த விளையாட்டுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

மாடறுக்க தடை என்கின்ற இனவாத சிந்தனையை ஒதுக்கிவிட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *