கையை உயர்த்தி கருத்து கூற முற்பட்ட அசாத் சாலி – நேற்றைய விசாரணையில் நடந்தது என்ன?

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி விளக்கமறியலில் - news in Tamil

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி க்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பத்திரம் , நீதிமன்றால் அவருக்கு கையளிக்கப்பட்டது.

விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவில், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் ஆயுதம் தரித்த சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில், அசாத் சாலிக்கு எதிரான குற்றப் பத்திரிகை அவரிடம் கையளிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற வழக்கு:

அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் எச்.சி./2778/2021 எனும் இலக்கத்தில் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அசாத் சாலிக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கே நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டுக்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், கொழும்பு மேல் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி மத, இன பேதங்களை தோற்றுவிக்கும், வன்மத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி 1988 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1982 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) ஏ பிரிவுடன் இணைத்து பர்க்க வேண்டிய 2 (2) ( ஈ ) அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றினை அசாத் சாலி புரிந்துள்ளதாக முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐசிசிபிஆர் இன் கீழும் குற்றச்சாட்டு

அத்துடன் இதே சம்பவம் காரணமாக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் ( ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பர்க்க வேண்டிய 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றை அசாத் சாலி புரிந்துள்ளதாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

56 சாட்சியாளர்கள்

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக சட்ட மா அதிபரால் 56 சாட்சியாளர்களின் பெயர் பட்டியல் மேல் நீதிமன்றுக்கு பட்டியலிட்டு வழங்கப்பட்டன. அத்துடன் சான்றுப் பொருட்களாக இறுவெட்டுக்கள், மெமரி சிப் , ஊடக சந்திப்பு பிரதி, கடிதம் ஒன்று ஆகியனவும் சட்ட மா அதிபரால் பட்டியலிடப்பட்டுள்ளன.

சட்டத்தரணிகளின் வாதங்கள்

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அசாத் சாலிக்காக, சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜரானார்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா ஆஜரானார். இந நிலையிலேயே முதலில் குற்றப் பத்திரம் அசாத் சாலிக்கு கையளிக்கப்பட்டது.

பிணை கோர முஸ்தீபு

இந்நிலையில், குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ள பின்னணியில் பிரதிவாதியான அசாத் சாலிக்கு பிணைகோரி வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பிரதான நீதவான், அசாத் சாலியின் குறித்த ஊடக சந்திப்பு இன மத பேதங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தோன்றவில்லை என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் வீரவங்ச எதிர் சட்ட மா அதிபர் வழக்குத் தீர்ப்பின் அடிப்படையிலும் பிணை கோர எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைவிட, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிணை பெற்றுக்கொள்ள சட்ட மா அதிபரின் அனுமதி வேண்டும் என்பதால், சட்ட மா அதிபர் தரப்புடன் முரண்பட்ட நிலையில் வாதங்களை முன்வைக்கப் போவதில்லை எனவும், பிணைக்கோரிக்கை தொடர்பில் சாதகமாகவும் மனிதாபிமான ரீதியிலும் பரிசீலிக்க சட்ட மா அதிபர் தரப்பில் ஆஜராகும் சிரேஷ்ட அரச சட்டவாதிக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீதிபதியின் கேள்வி

இந்நிலையில் மன்றில் ஆஜரான சிஐடி அதிகாரியிடம் நீதிபதி அமல் ரணராஜா, வழக்கின் சான்றுப் பொருட்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிஐடியினர், அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இதன்போது மீண்டும் நீதிமன்றுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரனி மைத்திரி குணரத்ன, வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள விவகாரத்துடன் தொடர்புபட்ட ஊடக சந்திப்பை தாம் மறுக்கவில்லை எனவும், அதனால் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை அவசியமற்றது என தெரிவித்ததுடன், அந்த ஊடக சந்திப்பின் ஒவ்வொரு வார்த்தையையும் எழுத்துருவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிரதியை தன்னால் மேல் நீதிமன்றுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட பிணை கோரிக்கை

இதனையடுத்து, நீதிமன்றுக்கு அனைத்து சான்றுப் பொருட்களும் கிடைத்திராத நிலையில், நேற்றைய தினம் பிணை கோரிக்கை முன்வைப்பது கைவிடப்பட்டது.

விசாரணைக்கு திகதி குறிப்பு

இதனையடுத்து, அசாத் சாலிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுக்க திகதி குறித்த நீதிபதி அமல் ரணராஜா, வழக்கை எதிர்வரும் நவம்பர் 2,9,11 ஆம் திகதிகளில் பிற்பகல் 1.30 மணி முதல் விசாரிப்பதாக அறிவித்தார்.

அதற்காக, வழக்கின் 1,2,3,5,6,7,8,15,34,35 ஆம் சாட்சியாளர்களுக்கு சாட்சி வழங்க நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

நீதின்றில் கருத்துரைக்க முற்பட்ட அசாத் சாலி

இதன்போது தனது கையை உயர்த்தி நீதிமன்றில் கருத்துக் கூற முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனுமதி கோரிய நிலையில், அரசியல் பேசாது வேறு ஏதும் கூற இருப்பின் கூறுமாறு நீதிபதி அமல் ரணராஜா அனுமதித்தார்.

இதனையடுத்து, தான் ஏழரை மாதங்களாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதி ஸஹ்ரானுக்கு எதிராக செயற்பட்ட தன்னை இவ்வாறு தடுத்து வைத்துள்ளமை நியாயமற்றது என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.

இதன்போது, அதனை நிறுத்திய நீதவான், வழக்கு விசாரணையின்போது, அது சார்ந்த விடயங்களை நீதிமன்றில் தெரிவிக்க அனுமதியளிப்பதாக கூறி வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி அதுவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தகவல் – மெட்ரோ நியுஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *