நாடு முழுவதும் ஆபத்து – பொது மக்களுக்கு விஷேட எச்சரிக்கை

ஒமிக்ரோன் ஆபத்து - மக்களுக்கு எச்சரிக்கை - News in Tamil

புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து பயணிப்பவர்கள், இந்த மாறுபாட்டை காவிச் செல்கிறார்களா என்பதை அடையாளம் காண முடியாது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், நமது நாட்டில் நாம் செய்யும் மரபணு பரிசோதனை மூலம் மட்டுமே ஒமிக்ரோன் வைரஸைக் கண்டறிய முடியும். மாதிரிகள் மூலம் கண்டறியப்படும் வரை, வைரஸ் நாடு முழுவதும் பரவக்கூடும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

மேலும், நாட்டில் உள்ள மக்கள் இந்த மாறுபாட்டை காவிச் செல்கின்றனரா என்பதை அடையாளம் காண முயற்சிப்பதை விட, நாட்டுக்குள் நுழைவதற்கான வழிவகைகளைக் குறைப்பது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சாத்தியமான முடக்கத்தைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் நாட்டை மூடும் திட்டம், சுகாதார அமைச்சிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என்றும் அவர் கூறினார்.

அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. அந்த நிலையை நாடு அடையாமல் தடுப்பது எங்களின் பொறுப்பு என்றார்.

இதேவேளை புதிதாக இனங்காணப்பட்டுள்ள “ஒமிக்ரோன்” வைரஸ் சர்வதேச அளவில் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் ​ஆகையால், அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அறிவுறுது்தியுள்ளது.

தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.” என்றும் மேற்படி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.