புத்தளத்தில் இதுவரை 04 பேர் பலி – பலர் பாதிப்பு; தற்போதைய நிலவரம்

புத்தளம் செய்திகள் இதுவரை 4 பேர் பலி - Today news in Tamil

புத்தளம் செய்திகள் – சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 217 குடும்பங்களைச் சேர்ந்த 78,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் உயிரிழதுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள அதே நேரம், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

21 தற்காலிக முகாம்களில் 1637 குடும்பங்களைச் சேர்ந்த 5234 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு, குடிநீர் வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் என்பன பிரதேச செயகங்கள் ஊடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி 21 தற்காலிக முகாம்களிலும் அரச திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, பொலிஸார், முப்படையினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டுமன்றி, நகர சபை, பிரதேச சபை தலைவர்களும் தமது உத்தியோகத்தர்களை மேற்படி பணிக்கு அமர்த்தி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் நான்கு பேர் மரணமாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போன இருவரையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாத்தவில்லு, மஹாகும்புக்கடவல மற்றும் ஆனமடுவ , முந்தல் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே வெள்ளத்தில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், முந்தல் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன், வெள்ளத்தினால் ஏற்பட்ட சொத்து சேத விபரங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளத்தில் திங்கட்கிழமை (08) மாலை ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் 4 அடிக்கும் மேல் வெள்ளநீர் வீதிக்கு குறுக்காக மேவி பாய்ந்து சென்றமையால் அவ்வீதியூடான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், பல மணி நேரம் கடும் வாகன நெரிசலும் காணப்படன.

எனினும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, முப்படையினர் களத்தில் இறங்கி, வாகன நெரிசலை செவ்வாய்க்கிழமை (09) காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெதுரு ஓயா நிர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், ராஜாங்கன நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஆறு அடி வரையும் மற்றும் நான்கு வான் கதவுகள் நான்கு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும் , அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஐந்து அடி வரையும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இரண்டு அடி வரையும், இரண்டு வான் கதவுகள் 6 அங்குலம் வரையும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார். புத்தளம் செய்திகள்