பயணப் பையில் சடலமாக இருந்த பாத்திமா; வௌியான பின்னணி தகவல்கள்

மாளிகாவத்தை கொழும்பு பெண் சடலமாக மீட்பு; News in Tamil

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள குப்பை மேட்டில் பயணப் பொதியொன்றில் மீட்கப்பட்ட சடலம், 44 வயதுடைய பெண்ணொருவரின் சடலமென விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண், கொழும்பு மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த பாத்திமா மும்தாஸ் என குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் சூது விளையாட்டில் ஈடுபட்டுவந்துள்ள அதேவேளை வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றுமுன்தினம் (04) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த பயணப்பொதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ தெரிவித்திருந்தார்.

குறித்த பகுதியிலுள்ள வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் குறித்த பயணப்பொதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்பதற்காக குறித்த பெண் மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் சென்றுள்ளதாகவும், பின்னர் குறித்த பெண்ணுடன் முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த போது பாத்திமா மும்தாஸ் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் அவர் காணாமல் போனதாக அவரது கணவர் கொழும்பு மாளிகாவத்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *