லண்டனில் தீயில் கருகி பலியான இலங்கைக் குடும்பம் – 03 மாதங்கள் முன் வாங்கிய வீடு

லண்டனில் தீயில் கருகி பலியான இலங்கைக் குடும்பம்

லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்த நிலையில், குறித்த வீடு மூன்று மாதங்களுக்கு முன்னரே வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடொன்றில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. இதில் தாய், இரு பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் இன்றைய தினம் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் முன் கூடி மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த வீட்டினை மூன்று மாதங்களுக்கு முன்னரே 425,000 பவுண்டுகளிற்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.