இலங்கையிலும் தப்லீக் ஜமாத் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும்

தப்லீக் ஜமாத் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் வாழும் பாரம்பரிய, சுதேச முஸ்லிம் சமூகத்தினரது செயற்பாடுகளுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளன என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், சவூதி அரசாங்கம் தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பாரதூரத்தன்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளதுடன் தவறுகளையும் திருத்திக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக உள்ள தப்லீக் ஜமா அத் அமைப்பை தடை செய்வது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் தற்போது முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைக் காரணி, அடிப்படைவாதிகளின் நோக்கம் உள்ளிட்டவற்றை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டுள்ளோம்.

உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் விளைவுகளை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளதுடன் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைககளையும் மேற்கொண்டு வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் சவூதி அரேபிய இளவரசர் சல்மான் கடந்த வாரம் முன்னெடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. சவூதி அரேபியாவில் செயற்படும் தப்லீக் ஜமாத் இயக்கம், தவா என்ற எண்ணக்கருவை கொண்டு அமைப்புக்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

தப்லீக் ஜமாத் அமைப்பின் அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து ஆரம்ப காலத்திலிருந்து குறிப்பிட்டு வருகிறோம்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் எதிர்காலத்தில் தோற்றம் பெறவுள்ள விளைவுகள் குறித்து குறிப்பிடுகையில், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் அவை குறித்து கவனம் செலுத்தவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதொன்று கிடையாது,பொதுபல சேனா அமைப்பு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என குறிப்பிட்டு எம்மை இனவாதிகளாக சித்தரித்தார்கள்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை பிரிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக சபை செயற்படுகிறது.அதன் தலைவர் ரிஸ்தி முப்தி. தப்லீக் ஜமாஅத் அமைப்பின் தலைவராக உள்ளார்.

சவூதி அரேபியாவில் தப்லீக் ஜமாத் இயக்கம் தடை செய்யப்பட்டமை தொடர்பில் உலமா சபை தனது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும்.

இஸ்லாமிய இளம் தலைமுறையினர் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்படுவதற்கு உலமாக சபையின் செயற்பாடுகள் பிரதான காரணியாக காணப்படுகிறது.

அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். மட்டக்களப்பு, காத்தான்குடி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

கிழக்கு மாகாணத்தில் வாழும் பாரம்பரிய சுதேச முஸ்லிம் சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளுக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளதனை அறியக் கிடைத்தது.

இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் குறித்து அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சவூதி அரசாங்கம் தப்லீக் ஜமாஅத் அமைப்பினை தடை செய்துள்ளதை போன்று இலங்கையிலும் அந்த அமைப்பினை தடை செய்வது அவசியமாகும்” என்றார்.